Land-related Breach of Peace and Legal Provisions
காணி தொடர்பிலான சமாதானக்குலைவும் சட்ட ஏற்பாடுகளும்
An explanation of Section 66 of the Primary Courts’ Procedure Act — a legal safeguard against breach of peace in land disputes.
அறிமுகம்
இலங்கையில் ஆதனம் சார்ந்த பிரச்சினைகள் முக்கியமான பிரச்சினைகளாக இருந்து வருகின்றன. ஆதனத்தின் உடமை, பயன்பாடு, எல்லை, வழியுரிமை, பயிரிடும் உரிமை போன்ற பல்வேறு விடயங்களை மையமாகக் கொண்டு ஏற்படும் பிரச்சினைகள் சில சந்தர்ப்பங்களில் வன்முறைக்கும் வழிவகுக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் சமாதானத்தைப் பாதுகாக்கும் நோக்கில் Primary Courts’ Procedure Act No. 44 of 1979 இன் பிரிவு 66 மிக முக்கியமான சட்ட ஏற்பாடாக விளங்குகிறது.
பிரிவு 66 இன் நோக்கம், நில உரிமையை இறுதியாக தீர்மானிப்பதல்ல. மாறாக, நிலம் தொடர்பான தகராறுகளால் சமாதானக் குலைவு (Breach of peace) ஏற்படாமல் தடுப்பதே இதன் அடிப்படை நோக்கமாக காணப்படுகின்றது. இந்த சட்டம் வழியாக முதன்மை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் யார் குறித்த ஆதனத்தின் உடமையில் இறுதியாக இருந்தாரோ அவரிடம் உடமையை கையளிப்பதும், ஆதனத்தின் உடமையை சமாதானமாக உடமை கொள்வதனை எவரேனும் ஒருவர் குழப்பும்போது அதனை தடுப்பதும், ஆதனத்தின் உடமை சார்ந்த உரிமை தவிர்ந்த ஏனைய உரிமைகளை பாதுகாப்பதும் ஆகும்.
இலங்கையில் நிலத் தகராறுகள் பல காலமாக நீதிமன்றங்களின் முன் கொண்டுவரப்பட்டுள்ளன. நிலம் குறித்த பிரச்சினைகள் பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களுக்கிடையேயான சச்சரவுகளைத் தாண்டி சமூக அளவிலான பதற்றத்தையும் உருவாக்குகின்றன. இதனால் பொதுச் சமாதானத்தைப் பேணுவதற்கான விசேட நடைமுறை ஒன்றின் தேவை ஏற்பட்டது. அந்தத் தேவைக்கான பதிலாகவே Primary Courts’ Procedure Act இன் VII ஆம் பகுதி உருவாக்கப்பட்டது.
சட்ட ஏற்பாடுகள்
பிரிவு 66 இன் கீழ், ஒரு நிலத் தகராறு சமாதானக் குலைவுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உருவானால், அதனை விசாரிக்கும் அதிகாரம் முதன்மை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தனிப்பட்ட உரிமைத் தீர்ப்பை வழங்காமல், தற்போதைய உடமை நிலையைப் (status quo) பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
காணி சம்பந்தமான பிணக்கொன்றின் காரணத்தினால் சமாதானக்குலைவு ஏற்படுமென அஞ்சப்படுகின்றவிடத்தெல்லாம் அல்லது சமாதானக்குலைவு ஏற்படுதல் சாத்தியமாக இருக்கின்ற போதெல்லாம் பிணக்கை விசாரிக்கும் பொலிஸ் அலுவலர் காணி எந்த ஆரம்ப நீதிமன்ற நியாயாதிக்கத்தினுள் அமைந்திருக்கின்றதோ அந்த ஆரம்ப நீதிமன்றில் பிணக்குச் சம்பந்தமான தகவலொன்றை இயன்றளவு தாமதமின்றி கோப்பிடுதல் வேண்டும். அல்லது அத்தகைய பிணக்கிற்குரிய கட்சிக்காரர் எவரும் நிகழ்வுகளையும் கோரப்படும் நிவாரணங்களையும் பிணக்கிற்கான ஏனைய கட்சிக்காரர்களின் பெயர்களையும் முகவரிகளையும் எதிர்வாதிகளாகக் குறித்துரைக்கின்றதுமான சத்தியக்கடதாசி மூலம் தகவலொன்றை அத்தகைய ஆரம்ப நீதிமன்றில் கோப்பிடலாம். இவ்வாறாக இரண்டு வழிகளில் வழக்கொன்றை ஆரம்ப நீதிமன்றில் ஆரம்பிக்க முடியும்.
பிரிவு 66 இன் கீழான விசாரணை சுருக்க முறையில் (Summary Inquiry) நடைபெறல் வேண்டும். அதாவது இப்பிரிவின் கீழ் விசாரணை ஒவ்வொன்றும் அவ்விசாரணை ஆரம்பித்ததிலிருந்து மூன்று (03) மாதத்திற்குள் முடிவடைதல் வேண்டும்.
இது நீண்டகால சிவில் வழக்கைப் போல அல்ல. நீதிமன்றம் விரைவாக உண்மைகளை ஆராய்ந்து, சமாதானத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரங்கள்:
- தற்போதைய உடைமையாளரை அடையாளம் காணலாம்.
- நிலைமையை மாற்ற வேண்டாம் என உத்தரவிடலாம். (maintain the status quo)
- சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட நபரை மீண்டும் உடைமையில் அமர்த்தலாம்.
- சமாதானக் குலைவைத் தடுக்க இடைக்கால உத்தரவுகளை வழங்கலாம்.
பிரிவு 66 இன் மிக முக்கிய அம்சம், “Possession” மற்றும் “Ownership” ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை உணர்த்துவதாகும். நீதிமன்றம் உடைமையைப் பாதுகாக்கலாம் ஆனால் உரிமையை நிரந்தரமாக தீர்மானிக்காது. உரிமை தொடர்பான இறுதி தீர்வு மாவட்ட நீதிமன்றம் போன்ற சிவில் நீதிமன்றங்களால் வழங்கப்பட வேண்டும்.
பிரிவு 66 விசாரணைகளில் யாரிடம் ஆதனத்தின் உடமை உள்ளது என்பது தொடர்பில் நிரூபிக்கத்தக்க ஆவணங்களான வரி செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டுக்கள், மின்சார மற்றும் நீர் கட்டண பதிவுகள், கிராம சேவகர் அறிக்கைகள், அயலவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அல்லது சத்தியக்கூற்றுக்கள் என்பவற்றை மன்றின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும்.
ஓர் ஆதனத்தின் உடமையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவரை இன்னொருவர் குழப்பும்போது மன்றானது யாரிடம் இறுதியாக உடமை இருந்ததோ அவரிடமே உடமையை வழங்கி ஆதனம் இருந்த நிலையை தொடர்ந்து பேணுமாறு கட்டளை ஆக்கும்.
இதனை ஆரம்ப நீதிமன்ற நடைமுறை சட்டத்தின் பிரிவு 68(1) பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “where the dispute relates to the possession of any land or part thereof it shall be the duty of the judge of the primary court holding the inquiry to determine as to who was in possession of the land or the part on the date of the filing of the information under section 66 and make order as to who is entitled to possession of such land or part thereof”
இதனை தீர்க்கப்பட்ட வழக்கான Kanagasabai Vs Mayilwaganam 78 NLR 280 282 என்ற வழக்கில் Sharvananda J பின்வருமாறு கூறியிருந்தார். “The primary object of the jurisdiction so conferred on the magistrate is the prevention of the breach of the peace arising in respect of a dispute affecting land. The section enables the parties before the court and maintain the status quo until the rights of the parties are decided by a competent civil court”. குறித்த தீர்ப்பின் சாராம்சம் என்னவெனில் ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கை முறைச்சட்டத்தின் கீழ் ஒரு நீதிவானின் நியாயாதிக்கம் என்னவெனில் ஒரு பிணக்கானது தகுதிவாய்ந்த சிவில் நீதிமன்றால் தீர்க்கப்படும்வரை உள்ளதை உள்ளவாறு பேணச் செய்தல் (maintain the status quo) என்பதாகும்.
மேலும் ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கை முறைச்சட்டத்தின் பிரிவு 68 (3) பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“Where at an inquiry into a dispute relating to the right to the possession of any land or any part of a land the Judge of the Primary Court is satisfied that any person who had been in possession of the land or part has been forcibly dispossessed within a period of two months immediately before the date on which the information was filed under section 66. ”
அதாவது ஏதேனும் காணியை அல்லது அதன் பாகத்தை உடைமை கொண்டிருந்த எவரேனும் ஆள் பிரிவு 66 ஆம் பிரிவின் கீழ் தகவல் கோப்பிடப்பட்ட திகதிக்கு நேர்முன்னர் இரு மாத காலத்தினுள் பலேற்காரமாக உடமை பறிக்கப்பட்டிருக்கின்றார் என ஆரம்ப நீதிமன்ற நீதிபதி திருப்தியடையுமிடத்து உடமை பறிக்கப்பட்ட கட்சிக்காரருக்கு உடைமையை மீள ஒப்படைக்க முடியும்.
அத்துடன் பிணக்கானது ஏதேனும் காணியின் அல்லது அதன் பாகத்தின் உடமைக்கான உரிமை அல்லாத அத்தகைய காணியின் அல்லது அதன் பாகத்தின் வேறு ஏதேனும் உரிமை பற்றியதாக இருக்கின்றவிடத்து உரிமைக்கு யார் உரித்துடையவர் எனத் தீர்மானித்து உரிமை பற்றி உள்ள நிலை தொடர்ந்து இருக்கும்படி கட்டளை வழங்கப்படும்.
பிரிவு 66 விசாரணை முடிவடைந்தாலும், எந்தத் தரப்பினரும் தங்களுடைய உரிமையை நிலைநிறுத்துவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடரலாம். எனவே, இது சிவில் வழக்குகளுக்கு மாற்றாக அல்ல துணை பாதுகாப்பு நடைமுறையாகும்.
இலங்கை போன்ற நிலத்தை மையமாகக் கொண்ட சமூகத்தில், நிலத் தகராறுகள் குடும்ப உறவுகள் மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடியவை. இந்த நிலையில் பிரிவு 66 சமூக அமைதியைப் பேணுவதற்கான ஒரு அவசியமான சட்ட கருவியாக விளங்குகிறது.
முடிவுரை
Primary Courts’ Procedure Act இன் பிரிவு 66 இலங்கையின் நிலச் சட்ட அமைப்பில் மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாகும். இது நில உரிமையைத் தீர்மானிக்கும் சட்டமல்ல ஆனால் சமாதானக் குலைவைத் தடுக்கும் சட்ட நடைமுறையாகும். தற்போதைய உடைமையைப் பாதுகாப்பதன் மூலம் வன்முறை மற்றும் சமூக பதற்றங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த சட்டம் செயல்படுகிறது. எனவே, நிலத் தகராறுகள் அதிகமாக காணப்படும் சூழலில் பிரிவு 66 சமூக அமைதியை நிலைநிறுத்தும் ஒரு அத்தியாவசிய சட்ட கருவியாகத் திகழ்கிறது. மேற்கண்ட விவாதங்கள், நீதித் தீர்ப்புகள், நடைமுறை அம்சங்கள் மற்றும் சமூகப் பயன்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், பிரிவு 66 இலங்கையின் நீதித்துறை அமைப்பில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
Mrs Mathuri Niroshan (LL.B (Department of Law, University of Jaffna), LL.M ( Faculty of Law, Uinversity of Colombo), Dip in Forensic Medicine (Faculty of Medicine, University of Peradeniya)
Former Magistrate,
Atrtorney at Law & Notary Public,

