Thesawalamai Law and Property Inheritance Rights for Northern Province Tamils
வடமாகாணத் தமிழர்களுக்கான தேசவழமைச் சட்டமும், ஆதனவழியுரிமையும்
An explanation of Thesawalamai law for Northern Province Tamils — applicability, and property categories of mudusam, dowry, and thediya theddam.
யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி — கல்லூரி நிறுவனர் நிற்சிங்கம் கனகரத்தினம் நினைவுப்பேருரை (2023)
தேசவழமைச் சட்டத்திற்கான அறிமுகம்
தேசவழமை என்பது ஒரு நாட்டின் வழக்காறுகள் எனப் பொருள்படும். இலங்கையில் தேசவழமை என்பது, யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்காறுகள் ஆகும். யாழ் மக்களின் வழக்காற்றுக் கோவையானது 1707 ஆம் ஆண்டு டச்சுக்காரரால் பிரகடனம் செய்யப்பட்டது. டச்சுக்காரரின் ஆட்சிக்காலத்தின்போது சைமன்ஸ் என்ற ஆளுனர் யாழ்ப்பாணத் தமிழர்களின் சட்டம் மற்றும் வழக்காறுகளை விசாரணை செய்வதற்கென கிளாஸ் ஐசாக்ஸ் என்ற யாழ்ப்பாண டிசாவுக்கு அறிவுறுத்தியதுடன் அவற்றை எழுத்தில் தயாரிக்கும்படியும் கேட்டார். அதற்கிணங்க, டச்சு மொழியில் தயாரிக்கப்பட்ட ஆவணம் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு யாழ்ப்பாண மாகாணத்தைச் (தற்போதைய வட மாகாணம்) சேர்ந்த பன்னிரண்டு முதலியார்களுக்கு அவர்களின் பரிசீலனைக்கென வழங்கப்பட்டது. முதலியார்கள், யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற வழமையான வழக்காறுகளுடன் அக்கோவை இணங்கியிருப்பதாக உறுதிப்படுத்தினார்கள். 1806ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க தேசவழமை ஒழுங்குவிதியானது 1706ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஆளுநர் சைமன்ஸ் என்பவரது கட்டளைப்படி ஒன்றுசேர்க்கப்பட்டவற்றைக் கொண்டே தேசவழமை என ஏற்பாடு செய்கின்றது. யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்களுக்கான பிரத்தியேகமான சட்டமே தேசவழமை என்பதுடன் தேசவழமை என்பதனால் குறிப்பிடப்படுவது தேசத்தின் பாரம்பரியம் அல்லது வழக்காறு என்பதாகும். தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய தமிழர்களினதும் இந்நாட்டு சட்டங்களினதும் ஒன்றிணைப்பாலேயே இச்சட்டம் உருவானது எனப்படுகின்றது. இவர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
-
இந்தியாவின் மலபார் (கேரளா) பிரதேசத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் - இவர்கள் தாய்வழி சொத்து பின்னுறும் சட்ட முறைமையாகிய மருமக்கத் தாயம் என்ற வழக்காற்றைக் கொண்டு வந்தனர்.
-
கொரமண்டல் கரையிலிருந்து வந்தவர்கள் - இவர்கள் தந்தைவழி சொத்து பின்னுறும் வழக்காற்றைக் கொண்டு வந்தனர்.
தேசவழமை தொடர்பாக பின்வரும் சட்டங்கள் காணப்படுகின்றன.
- தேசவழமை ஒழுங்குவிதி அல்லது தேசவழமைக்கோவை (Thesawalamai Code)
- யாழ்ப்பாண திருமண மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டம் (Jaffna Matrimonial Rights and Inheritance Ordinance)
- தேசவழமை முன்வாங்குரிமைக் கட்டளைச் சட்டம் (Pre-emptive Rights Ordinance)
தேசவழமையின் ஏற்புடைமை
தேசவழமையானது, ஆள்சார் சட்டம் மற்றும் இடம் சார் சட்டம் என்ற இரு பண்புகளைக் கொண்ட ஓர் உள்நாட்டுச் சட்டமாகும். தேசவழமை யாருக்கு ஏற்புடையதாகும் (Applicability) என நோக்குமிடத்து, யாழ்ப்பாண மாகாண மலபார் நிரந்தரவாசிகளுக்கு ஏற்புடையதானதாகும். யாழ்ப்பாண மாகாணம் என்பது தற்போதுள்ள வட மாகாணம் ஆகும். ஆள்சார் சட்டத்தின் பண்புகளில் ஒன்று, அது அவ்வாட்களைப் பின்தொடர்ந்து செல்லக்கூடியதாகும். அதாவது வடமாகாணத் தமிழர்கள் இலங்கையினுள் அவர்கள் செல்லுமிடம் எல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்து தேசவழமைச் சட்டம் அவர்களுக்கு ஏற்புடையதாக வரும். இது தொடர்பில் சட்ட ஏற்பாடு வெளிப்படையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கைக்கு வெளியே கூட இத்தகைய வழக்காற்றுச் சட்டத்தை எண்பிப்பதன் மூலம் ஏற்புடையதாகக் காட்டமுடியும். யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டம் (Jaffna Matrimonial Rights and Inheritance Ordinance) 1947ஆம் ஆண்டின் 57ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ளது. இக்கட்டளைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவானது, திருமணம் மூலமாக பெண்களுக்கு தேசவழமை ஏற்புடையதாவதையும் ஏற்புடையதாகாமை தொடர்பிலும் ஏற்பாடு செய்கின்றது. தேசவழமையினால் ஆளப்படும் வடமாகாணத்தைச் சேர்ந்த மலபார் நிரந்தரவாசியான பெண் ஒருவர் வடமாகாணத்திற்கு வெளியே உள்ள ஆண் ஒருவரைத் திருமணம் செய்வாராயின் திருமணம் வலிதாகவுள்ள காலப்பகுதியில் அப்பெண் தேசவழமையினால் ஆளப்படமாட்டார். மாறாக தேசவழமையினால் ஆளப்படாத பெண் ஒருவர் தேசவழமைக்கு உட்பட்ட ஆண் ஒருவரைத் திருமணம் செய்வாராயின், திருமணம் வலிதாகவுள்ள காலப்பகுதியில் அப்பெண் தேசவழமையினால் ஆளப்படுவார். தேசவழமை வடமாகாணத்தில் அமைந்துள்ள சகல காணிகளுக்கும் ஏற்புடையதான சட்டம் ஆகும். இங்கு யார் அத்தகைய காணிகளின் சொந்தக்காரர் என்பது பொருத்தமற்ற விடயமாகும். உதாரணமாகக் கண்டியச் சட்டத்தினால் ஆளப்படும் கண்டியச் சிங்களவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் நபர் ஒருவரோ வடமாகாணத்திலுள்ள காணியொன்றை அவர் வாங்குமிடத்து, அக்காணி தொடர்பில் தேசவழமையே ஏற்புடையதாகும்.
தேசவழமையின் கீழான ஆதனம்
தேசவழமை நியதிகளின்படி திருமணத்தின்போது கணவனால் கொண்டுவரப்படும் ஆதனமானது முதுசம் எனவும், மனைவியினால் கொண்டு வரப்படும் ஆதனமானது சீதனம் எனவும், திருமணத்தின் போது ஈட்டப்படும் இலாபங்கள் தேடிய தேட்டம் எனவும் தேசவழமையின் கீழ் ஆதனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டத்தின் 15 ஆம் பிரிவானது, ஆண் ஒருவரது அல்லது பெண்ணொருவரது பெற்றோரின் அல்லது எவரேனும் முன்னோரின் இறப்பில் வம்சாவழியாக வந்துறுகின்ற ஆதனம் முதுசம் என ஏற்பாடு செய்யப்படுகின்றது. எனவே, கணவன் போன்று மனைவியும் தனது பெற்றோரிடமிருந்து அல்லது எவரேனும் தனது முன்னோரிடமிருந்து முதுசம் என்னும் ஆதனத்தையும், சீதனம் என்னும் ஆதனத்தையும் கொண்டுவர முடியும். மேலும் யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டத்தின் 16ஆம் பிரிவானது, பெற்றோர் மற்றும் முன்னோர் அல்லாத உறவினரொருவரின் இறப்பின் விளைவாக வம்சாவழியாக வந்துறுகின்ற ஆதனமானது “உரிமை” என ஏற்பாடு செய்வதுடன், இன்னொரு வகையாக மேலே குறிப்பிடப்பட்ட ஆதனங்களை யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டம் வகைப்படுத்துகின்றது. தந்தைவழி ஆதனமென்பது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் அல்லது அவரது சகோதரர்களிடமிருந்து பணப்பெறுமதியின்றி முதுசம், சீதனம் அல்லது உரிமை என்ற வகையாகப் பெறப்படும் ஆதனங்கள் ஆகும். இதே போன்று தாய்வழி ஆதனமும் அமைகின்றது.
முதுசம்
தேசவழமைக் கோவையின் 1 ஆம் வாசகம் ஆதனங்களின் வேறுபட்ட வகைகளைப் பற்றி ஏற்பாடு செய்கின்றது. இவ்வாசகத்தின் நியதிகளின்படி புராதன காலத்திலிருந்து கணவரினால் திருமணத்தின் போது கொண்டு வரப்பட்ட அசையும், அசையா ஆதனங்கள் முதுசம் எனப் பெயரிடுவதன் மூலம் வேறுபடுத்துவதாக ஏற்பாடு செய்கின்றது. எனவே தேசவழமைக் கோவையின் நியதிகளின் படி முதுசம் என்பது கணவனுடைய ஆதனம் எனலாம். ஆயினும் யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின்படி ஆண் அல்லது பெண்ணுடைய பெற்றோர் அல்லது எவரேனும் முன்னோரின் இறப்பின் விளைவாக வம்சாவழியாக எவரேனும் ஆளுக்கு வந்துறுகின்ற ஆதனம் முதுசம் என ஏற்பாடு செய்கின்றது. எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்துக்கு முன்பதாக அல்லது பின்னராக முதுசம் எனப்படும் ஆதனம் வந்துற முடியும். ஆனால் பெண்ணுக்கு முதுசம் பெற்றோர் அல்லது முன்னோரின் இறப்பில் மட்டுமே வந்துற முடியும். மேலும் பெற்றோர் மகளுக்கு நன்கொடையளித்திருப்பின் அது முதுசம் அல்ல. அது போன்று பெற்றோர் திருமணத்திற்கென சீதனமும் அளித்திருக்க முடியும். எனவே முதுசம், நன்கொடையாகப் பெறப்பட்டவை மற்றும் சீதனம் என்பன பெண்ணின் தனிப்பட்ட ஆதனமாகும். பெண்ணொருவரின் திருமணத்தை நோக்கி வழங்கப்படுவது சீதனம் ஆகும். சீதனமானது திருமணத்திற்கு நீண்ட காலம் முன்பதாகவும் வழங்கப்படலாம். இவ்வாறு சீதனத்தைப் பெற்றுக்கொண்ட பெண், பெற்றோரின் எஞ்சிய ஆதனத்தில் பங்கு அல்லது உரிமை கோர முடியாது. ஆனால் சீதனம் பெறாத சகோதரிகள் ஆண்பிள்ளைகளுடன் சமமாக பெற்றோரின் ஆதனத்தில் வழியுரிமை பெறுவார்கள். அதேபோல திருமணம் செய்யாமலும் சீதனம் பெறாமலும் உள்ள பெண் தன்னுடைய சகோதரர்களுடன் சமமாக தாயின் ஆதனத்தில் வழியுரிமையைப் பெறுவார்கள். எனவே பெண் பிள்ளைகளுக்கு சீதனம் வழங்கப்பட்டுள்ளவிடத்து, அப்பெண்பிள்ளை பெற்றோரின் எஞ்சிய ஆதனத்தின் பங்கு உரிமை கோர முடியாது. தேசவழமையின் 3 ஆம் பிரிவானது “சீதனம் பெற்றுப்போன பெண்பிள்ளை தாங்கள் பெற்றுக் கொண்ட சீதனத்துடனே நின்றுவிடுகிறதேயல்லாமல் பிதா, மாதா, காலஞ்சென்றதன் பின் தங்களுக்கு இன்னும் அவர்களுடைய ஆதனத்தில் உரிமைப்பங்கு உண்டென்று வழக்குச் சொல்லவொண்ணாது” என ஏற்பாடு செய்கின்றது. அதாவது சீதனம் பெற்ற பெண் பிள்ளை பெற்றோரின் எஞ்சிய ஆதனத்தில் பங்கு கோரக் கூடாது. யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைக் கட்டளைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவானது மேற்கூறப்பட்ட விடயத்தை வேறு விதமாக வலியுறுத்துவதை அவதானிக்கலாம். அதாவது பிள்ளைகள் தாமாக இறந்த பெற்றோரின் வழியுரிமையாளராக வழியுரிமைக்கான எல்லா உரிமைகளையும் கைதுறந்தாலொழிய, இறந்த பெற்றோரிடமிருந்து சீதனம் என்ற வகையாகவோ அல்லது வேறு வகையாகவோ பெற்றுக் கொண்ட அசையும், அசையா ஆதனம் அனைத்தையும் கொண்டுவந்து ஒன்று சேர்ப்பதற்கு கட்டுப்பாடு உடையவர்கள். எனவே 33 ஆம் பிரிவின் நியதிகளின் படி ஆண்பிள்ளை ஆயினும் சரி பெண்பிள்ளை ஆயினும் சரி தமது பெற்றோரிடமிருந்து ஏதேனும் ஆதனத்தை முன்னதாக பெற்றிருந்தால், அவர்கள் பெற்றோர் இறந்த பின்னர் இறந்த பெற்றோரின் ஆதனத்திற்கு மரபுரிமையாளராக வரவேண்டுமாயின், தாம் ஏற்கனவே இறந்த பெற்றோரிடமிருந்து பெற்ற அனைத்து ஆதனங்களையும் கொண்டுவந்து ஒன்று சேர்த்த பின்னர் மற்றைய மரபுரிமையாளர்களுடன் இறந்த பெற்றோரின் முழுமையாக ஆதனத்தில் தமது பங்கைப் பெறமுடியும். அல்லாவிடின், மரபுரிமையாளராக வழியுரிமைக்கான எல்லா உரிமைகளையும் கைதுறக்கலாம் அவ்வாறு கைதுறப்பின் ஏற்கனவே பெற்றோரிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ளாத பிள்ளைகள் இறந்த பெற்றோரின் ஆதனத்தில் தமது பங்கைப் பெற்றுக்கொள்ளமுடியும். உதாரணமாக பெற்றோருக்கு 5 பிள்ளைகள் இருக்குமிடத்து, அவர்களில் 3 பெண்பிள்ளைகளும் 2 ஆண்பிள்ளைகளும் உள்ளனர். இங்கு முதலாவது பெண்பிள்ளையின் திருமணத்திற்கென சீதனம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெண்பிள்ளைக்குத் திருமணமாகாத போதிலும் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண்பிள்ளைக்கும் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் இறந்த பின்னர் பெற்றோரினால் விட்டுச் சென்ற ஆதனங்கள் எவ்விதமாக செல்ல வேண்டும் என வினா எழுகின்றது. இங்கு ஏற்கனவே சீதனம் பெற்ற பெண்பிள்ளையும் நன்கொடை பெற்ற பெண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் தமது வழியுரிமையைக் கைதுறக்கலாம். இதன் விளைவாக மூன்றாவது பெண்பிள்ளையும் இரண்டாவது ஆண்பிள்ளையும் இறந்த பெற்றோரின் எஞ்சிய ஆதனத்தில் சமமாக வழியுரிமை பெறுவார்கள் ஆயினும் யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவிற்கிணங்க ஏற்கனவே சீதனமாக ஆதனம் பெற்ற முதலாவது பெண்பிள்ளையும் நன்கொடை பெற்றுக்கொண்ட இரண்டாவது பெண்பிள்ளையும் முதலாவது ஆண்பிள்ளையும் தாம் பெற்றோர் உயிருடன் உள்ள போது அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சகல ஆதனங்களை மீள் ஒன்று சேர்த்த பின்னர் ஐந்து பிள்ளைகளும் முழுமையான ஆதனத்தில் பங்குரிமை பெற முடியும். இங்கு சீதனம் பெற்ற முதலாவது பெண்பிள்ளை ஆதனங்களை ஒன்று சேர்க்க மறுக்குமிடத்து, 33 ஆம் பிரிவின் கீழ் செயற்படமுடியாது. அதாவது சீதனம் மற்றும் நன்கொடை பெற்ற பிள்ளைகள் இறந்த பெற்றோரின் ஆதனத்தில் பங்குரிமை பெறமுடியாது. பெற்றோரிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ளாத இரண்டு பிள்ளைகளும் வழியுரிமையாக எஞ்சிய ஆதனத்தைப் பெற முடியும். யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டத்திற்கான 1947 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க திருத்தம் மூலம் முதுசத்தின் விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு திருமணத்தின் பின்னர் அசையா ஆதனம் வாங்கினால், அது தொடர்ந்தும் முதுசமாகவே இருக்கும். யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் கீழ் மனைவி தனது திருமணத்தின் போது அல்லது திருமணம் நிலையாக உள்ள போது நன்கொடை அல்லது வழியுரிமை என்ற வழியாக உரித்துடையவராக வருகின்ற அல்லது கொள்கின்ற ஆதனங்கள் அவரின் தனிப்பட்ட ஆதனமாகும். மனைவியின் தனிப்பட்ட ஆதனமானது கணவனின் கடன் அல்லது ஏதேனும் ஈடுபாடுகளுக்கு பொறுப்பாக மாட்டாது. அசையும் ஆதனம் தொடர்பில் மனைவி கணவனின் சம்மதமின்றி அவற்றைக் கையாளவும் கையுதிர்க்கவும் முழுமையான தத்துவம் உடையவர். மாறாக அசையாத ஆதனம் தொடர்பில் கணவனின் எழுத்திலான சம்மதமுடனேயே அவ்வாதனத்தைக் கையாள அல்லது கையுதிர்க்க உரித்துடையவர். கணவன் நியாயமற்ற முறையில் சம்மதமளிக்க மறுக்குமிடத்து, மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று விற்கமுடியும். ஆனால் மனைவி அசையா ஆதனம் தொடர்பில் தான் திருமணம் செய்யாதவர் என்றாற்போன்று இறுதிவிருப்பாவணத்தை நிறைவேற்றமுடியும். மேற்சொல்லப்பட்ட சட்டத்தின் 7 ஆம் பிரிவின்கீழ் கணவன் தனது திருமணத்தின் போது அல்லது திருமணம் நிலையாக உள்ளபோது நன்கொடை அல்லது வழியுரிமை என்ற வகையாக உரித்துடையவராக வருகின்ற ஆதனங்கள் அவரின் தனிப்பட்ட ஆதனம் ஆகும். கணவன் அத்தகைய ஆதனத்தைக் கையாள அல்லது கையுதிர்க்க முழுமையான தத்துவம் கொண்டுள்ளார். திருமணம் செய்யாதபோது ஆண்பிள்ளையினால் உழைக்கப்பட்ட அல்லது கொள்ளப்பட்ட ஆதனம் ஆண்பிள்ளையின் தனிப்பட்ட ஆதனமாகும். முடிவாகக் குறிப்பிடின், கணவனினால் திருமணத்தின்போது கொண்டுவரப்படும் ஆதனம் முதுசம் அதேபோன்று மனைவியினால் திருமணத்தின்போது திருமணத்தை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டு கொண்டுவரப்படும் ஆதனம் சீதனம் ஆகும். ஆனால் பெற்றோர் அல்லது எவரேனும் முன்னோரின் இறப்பினால் ஆண்பிள்ளையோ அல்லது பெண்பிள்ளையோ முதுசத்திற்கு உரித்துடையவராக வரமுடியும். பொதுவாக சீதனமாக அசையும் அல்லது அசையா ஆதனத்தைப் பெற்றுக் கொண்ட பெண்பிள்ளை அல்லது நன்கொடையாகப் பெற்றுக்கொண்ட ஆண்பிள்ளை பெற்றோரின் எஞ்சிய ஆதனங்களில் பங்கு கோரும் உரிமையை தாம் பெற்றுக் கொண்ட ஆதனத்தை ஒன்று சேர்க்க உடன்பட்டாலொழிய, இழந்துவிடுகின்றார். பெண்பிள்ளையைப் பொறுத்தவரை முதுசமாக இருப்பினும் நன்கொடையாக இருப்பினும் திருமணத்தின் பின்னர் சீதனமாக பொதுவாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இரண்டு வகையான ஆதனங்களும் கணவனின் எழுத்திலான சம்மதமின்றி கையுதிர்க்க முடியாது என்பதனாலாகும்.
சீதனம்
திருமணத்தின் போது மனைவியினால் கொண்டுவரப்படும் அசையும், அசையா ஆதனங்கள் அனைத்தும் திருமணத்தை நோக்காகக் கொண்டு வழங்கப்பட்ட ஆதனம் சீதனமாகும். பழைய தேசவழமையின் கீழான பெண்பிள்ளைகள் அவர்களது தாயினது ஆதனத்தையும், ஆண்பிள்ளைகள் அவர்களது தந்தையினது ஆதனத்தையும், வழியுரிமையாகப் பெறுவார்கள் என்ற நிலை முற்றாக மாற்றமடைந்து சீதனமானது, தந்தையின் முதுசம் தாயின் சீதனம் மற்றும் திருமணத்தின் போது உழைக்கப்பட்ட தேடிய தேட்டத்திலிருந்து வழங்கப்பட முடியும். சீதன ஆதன உறுதியில் “அன்பு மற்றும் பாசத்தின் பிரதிபயனாகவும் சொல்லப்பட்ட திறத்தவர்களிடையிலான திருமணத்திற்கான பிரதிபயனாகவும்” என்ற சொற்கள் காணப்பட முடியும். சாதாரண நன்கொடை ஆதன உறுதியில் “அன்பு மற்றும் பாசம் காரணமாக” கொடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. எனவே இங்கு அவதானிக்கப்படவேண்டிய சொற்கள் “திருமணத்திற்கான பிரதிபயனாக” என்பதாகும். மேலும் உறுதியின் வகையானது, சீதன உறுதியாக அல்லது நன்கொடை உறுதியாக காட்டப்பட முடியும். உறுதியின் வகை நன்கொடையாகக் காட்டப்படுமாயின் அதேவேளை திருமணத்திற்கான பிரதிபயன் என்ற சொற்பிரயோகமும் காணப்படாதவிடத்து, அத்தகைய நன்கொடை மீட்கப்படக்கூடியதாகும். திருமணத்திற்கான நன்கொடையாக உள்ளவிடத்து, நன்கொடை பெற்றவரின் நன்றியற்ற செயலைக்காட்டி மீட்க முடியாது. ஏனெனில் நன்கொடைக்கான பிரதிபயன் திருமணமாகும். அவ்வாறு மீட்கும் எண்ணம் பெற்றோரிடம் காணப்படுமாயின், அவ்வெண்ணமானது உறுதியில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும். கணவன் இறந்தபின்னர் மனைவி இறந்த கணவனின் ஆதனத்திலிருந்து பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கமுடியுமா என்ற வினா எழுகின்றது. தேசவழமையின் உட்பிரிவு (9) இன் நியதிகளின்படி தந்தை இறந்த பின்னர், தாய் பெண்பிள்ளைகள் திருமணம் செய்யும்வேளையில் சில ஆதனங்களை சீதனமாகக் கொடுக்க கடப்பாடுடையவர்கள் என ஏற்பாடு செய்கின்றது. இறந்த தந்தையின் ஆதனம் தொடர்பில் இருவகையாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- தந்தை இறந்த பின்னர் தாய் இறந்த தந்தையின் ஆதனத்தில் ஆயுள் நல உரித்தை மட்டுமே கொண்டுள்ளார்.
- தந்தை இறப்பின்மீது இறந்த தந்தையின் ஆதனம் பிள்ளைக்கு வழியுரிமையாக வந்துறுகின்றன. எனவே அதனை தாய் மீளப்பிரித்தொதுக்க அதிகாரம் கிடையாது என்பதாகும்.
தந்தையும் தாயும் இறக்குமிடத்து, ஆதனப் பங்கீடு தொடர்பான வினாவையும் ஆராயும்போது தேசவழமையின் (12) ஆம் உட்பிரிவின்படி தந்தையும் தாயும், பிள்ளைகள் பராயமடையாதுள்ளபோது இறப்பார்களாயின், தந்தை தாய் இருவரது ஆதனங்களும் பிள்ளையுடன் சேர்த்து உறவினர்களால் நியமிக்கப்படும் ஒருவரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். பிள்ளைகள் திருமணம் செய்யும் வயதை அடைந்ததும் உறவினர் ஒன்றுகூடி அந்தப்பெண்பிள்ளைக்கு இறந்த தந்தை தாயின் ஆதனத்திலிருந்து சீதனம் வழங்கலாம். அங்கு பெண்பிள்ளை திருமணமாகாதிருப்பின், ஆண்பிள்ளை திருமணம் செய்யும் போது பெண்பிள்ளைகளுக்கு பங்கினை அளித்தல் வேண்டும். திருமணமாகாத பெண்பிள்ளை இறப்பதன் மீது அவரது ஆதனம் ஆண்பிள்ளைகளைச் சென்றடையும். இங்கு உறவினர்கள் ஒன்றுகூடி பெண்பிள்ளையின் சீதனத்தை வழங்க முடியாது. ஏனெனில் அவர்கள் உரித்தை மாற்றுவதற்கு உரித்தைக் கொண்டிருக்கவில்லை என வள்ளியம்மைப்பிள்ளை எதிர் பொன்னம்பலம் (2 பிறவுணி அறிக்கை) வழக்கில் நீதியரசர் மொன்கிறீவ் குறிப்பிட்டார். எனவே தந்தை, தாய் இறக்குமிடத்து பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களின் ஆதனம் வழியுரிமையாக வந்துறுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். பொதுவாக ஆதனம் பிள்ளைகளிடையே ஆண், பெண் இருபாலரிடமும் சமமாகச் சென்றடைவதாகக் கருதமுடியும். அவர்கள் பதினெட்டு வயதினை அடைந்தபின்னர் அவர்களின் விருப்புக்கேற்ப ஆதனப்பங்கீட்டினைச் செய்துகொள்ளமுடியும்.
தேடிய தேட்ட ஆதனம்
தேடிய தேட்டம் என்பது, கணவன் அல்லது மனைவி திருமணம் நிலையாகவுள்ள போது உழைத்த இலாபங்கள் என சுருக்கமாகக் கூறமுடியும். தேடிய தேட்டமானது மூன்று காலவரையறையுள் ஆராயப்படமுடியும். முதலாவது காலம் 1911 ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதி எனவும் இரண்டாவது காலப்பகுதி 1911 ஆம் ஆண்டுக்கும் 1947 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி என்றும் மூன்றாவது காலப்பகுதி 1947 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதி எனக்கொள்ளமுடியும்.
1911 ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதி
1911ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியானது, தேசவழமை ஒழுங்குவிதிகள் மற்றும் வழக்காற்றுச் சட்டங்களினால் தேடிய தேட்டம் வரைவிலக்கணம் செய்யப்பட்டிருந்தது. 1911 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி வரைவிலக்கணம் செய்யப்பட்ட தேடிய தேட்டமானது, 1947 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் திருத்தக் கட்டளைச்சட்டத்தினால் மீள வரைவிலக்கணஞ் செய்யப்பட்டது. பழைய தேசவழமையின்கீழ் தேடிய தேட்டமானது “திருமணத்தின்போது கொள்ளப்பட்ட ஆதனம்” என வரைவிலக்கணஞ் செய்யப்பட்டிருந்தது. பழைய தேசவழமையின்கீழ் தேடிய தேட்டமானது உள்ளடக்குவது கணவனின் முதுச ஆதனத்திலிருந்தும் மனைவியின் சீதன ஆதனத்திலிருந்தும் எழுகின்ற இலாபங்களும் திருமணத்தின் போது கணவன் அல்லது மனைவியின் உழைப்பினால் கொள்ளப்பட்ட ஆதனங்களும் ஆகும். இங்கு கொள்ளப்பட்ட ஆதனம் என்பது புதிய கொள்ளுதல் அல்லது பெறுகையாக இருத்தல் வேண்டும். உதாரணமாக கணவன் முதுச ஆதனத்தை விற்றுப் பெறப்பட்ட பணத்திலிருந்து ஆதனம் வாங்கப்பட்டால் அது தேடிய தேட்ட ஆதனமாகக் கருதப்படமாட்டாது. ஓர் ஆதனம் தேடிய தேட்டமா என்ற வினா எழும் போது கவனிக்கவேண்டிய விடயம் எம்மூலத்திலிருந்து அதற்கான பிரதிபயன் பெறப்படுகின்றது என்பதாகும். எவருடைய பெயரில் ஆதனம் வாங்கப்பட்டுள்ளது என்பது விடயமல்ல. இங்கு கணவன் ஆதனத்தைக் கொள்வனவு செய்தாலும் சட்டத்தின் செயற்பாட்டினால் அவ்வாதனத்தின் அரைப்பங்கு மனைவிக்கு சென்றடைந்துவிடுகின்றது. எனவே கணவன் ஆதனத்தை முழுமையாக விற்க தத்துவம் காணப்படினும், அவர் அரைப்பங்குக்கு மேல் கையுதிர்க்க முடியாது. பழைய தேசவழமையின்கீழ் ஆண்பிள்ளைகள் தாம் திருமணமாகாதுள்ளபோது கொள்ளப்படும் ஆதனங்கள் அனைத்தும் பெற்றோரின் தேடிய தேட்டமாகக் கருதப்படுகின்றன. தேசவழமையின் உட்பிரிவு (7) இன் நியதிகளின்படி, ஆண்பிள்ளைகள் தாய், தந்தை உயிர்வாழும் காலம்வரை அவர்களிடம் எதனையும் கோரமுடியாது. மேலும் ஆண்பிள்ளைகள் திருமணமாகாதுள்ளபோது உழைத்த உழைப்புக்கள் தாய், தந்தையின் பொது ஆதனங்களுடன் சேர்க்கப்பட்டது. ஆண்பிள்ளைகள் திருமணம் செய்து வெளியேறிச் செல்லும் போது, அவர்கள் தாம் அணிந்துள்ள ஆபரணங்கள் தவிர வேறு எவற்றையும் கோரமுடியாது. தாய், தந்தை இறந்தபின்னர், ஆண்பிள்ளைகள் முதுசங்களைப் பிரித்தெடுக்கலாம் என ஏற்பாடு செய்கின்றது. எவ்வாறாயினும் தேசவழமையின் இவ்வேற்பாடானது தற்போது வழக்கொழிந்துவிட்டது. அதாவது ஆண் பிள்ளைகளின் உழைப்புகள் அவர்களது தனிப்பட்ட ஆதனமாகக் கருதப்படுகின்றன.
1911 ஆம் ஆண்டிற்கும் 1947 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி
1911 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் அச்சட்டத்தின் 19ஆம் பிரிவு தேடிய தேட்டம் என்றால் என்ன என்பதனை வரையறை செய்கின்றது. பின்வருவன கணவன், மனைவியின் தேடிய தேட்டமாக அறியப்படுதல் வேண்டும்.
- அ) திருமணம் நிலையாகவுள்ளபோது கணவனால் அல்லது மனைவியினால் பெறுமதியான பிரதிபயனுக்குக் கொள்ளப்பட்ட ஆதனம்; அத்துடன்
- ஆ) எவரேனும் கணவன் அல்லது மனைவியின் ஆதனத்திலிருந்து திருமணம் நிலையாகவுள்ளபோது எழுகின்ற இலாபங்கள்
அதாவது திருமணத்தின்போதான உழைப்பிலிருந்து பெறப்பட்ட ஆதனம் என்ற நிலை மாறி எவ்வாறாயினும் பெறுமதியான பிரதிபயனுக்குப் பெறப்பட்ட ஆதனம் என நிலை உருவாகிவிட்டது. இதன்விளைவாக, சீதன ஆதனம் விற்கப்பட்டு வேறொரு ஆதனம் திருமணம் நிலையாகவுள்ளபோது பெறப்படுமாயின், அது தேடிய தேட்டமாகக் கருதப்பட்டது. ஆயினும், வாழ்க்கைத்துணையொருவரால் வழியுரிமையாகப் பெறப்பட்ட ஆதனம் அல்லது நன்கொடையாகப் பெறப்பட்ட ஆதனம் தேடிய தேட்டம் என்ற ஆதன வகையினுள் வரமாட்டாது. ஏனெனில் அங்கு பெறுமதியான பிரதிபயன் கொடுபடவில்லை என்பதனாலாகும். அதாவது திருமணம் நிலையாகவுள்ளபோது பெறுமதியான பிரதிபயனுக்கு ஏதேனும் ஆதனம் கொள்ளப்பட்டால் அது தேடிய தேட்டமாகும். இதன் விளைவாக சீதன ஆதனம் அல்லது முதுச ஆதனம் விற்கப்பட்டு புதிய ஆதனம் கொள்ளப்பட்டால் அது தேடிய தேட்டமாவதுடன் அதன் அரைப்பங்கு மற்றைய வாழ்க்கைத்துணையைச் சென்றடைந்தது.
1947 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை
1947 ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க, யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் திருத்தக் கட்டளைச்சட்டம் தேடிய தேட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மாற்றி மீண்டும் 1911 ஆம் ஆண்டுக்கு முன்னைய வழக்காற்றுச் சட்ட நிலைக்குக் கொண்டு சென்றது. 19ஆம் பிரிவு பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது. பின்வருவன தவிர்ந்த ஆதனம் எதுவும் வாழ்க்கைத்துணையொருவரின் தேடிய தேட்டமாக இருப்பதாகக் கருதப்படுதலாகாது:
- அ. பெறுமதியான பிரதிபயனுக்கு திருமணம் நிலையாகவுள்ள போது அவ்வாழ்க்கைத்துணையினால் கொள்ளப்பட்ட ஆதனம், அத்தகைய பிரதிபயன் அவ்வாழ்க்கைத்துணையின் தனிப்பட்ட ஆதனத்தின் ஏதேனும் பாகத்தை உருவாக்குவதாக அல்லது பிரதிநிதித்துவம் செய்வதாக இருத்தலாகாது
- ஆ. அத்துடன் அவ்வாழ்க்கைத்துணையின் தனிப்பட்ட ஆதனத்திலிருந்து திருமணம் நிலையாகவுள்ளபோது எழுகின்ற இலாபங்கள்
1947 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் விளைவாக, வாழ்க்கைத்துணையொருவரது சீதன ஆதனமோ முதுசமோ விற்கப்பட்டு பெறப்பட்ட பணத்தைக்கொண்டு திருமணம் நிலையாகவுள்ளபோது புதிய ஆதனம் பெறப்படுமாயின், அவ்வாதனம் முறையே சீதன ஆதனமாகவோ அல்லது முதுசமாகவோ கருதப்படும். மாறாக தேடிய தேட்டமாகக் கருதப்படமாட்டாது. தேடிய தேட்டமாகக் கருதப்படவேண்டுமாயின், முன்னரைப்போல பெறுமதியான பிரதிபயன் மட்டுமல்ல அது தனிப்பட்ட ஆதனத்தின் பாகத்திலிருந்து எழுவதாக இருத்தலாகாது. மேலும் ஓர் ஆதனம் தேடிய தேட்டம் எனக் காட்டுகின்றவர் அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது எண்பிக்கும் பொறுப்பு கோருகின்றவர் மீதானதாகும். திருமணத்தின்போதான கொள்ளல்கள் மட்டுமே தேடிய தேட்டமாகக் கொள்ளப்பட வேண்டும். எனவே இரு வாழ்க்கைத்துணைகளும் உயிர் வாழும் வரையே “திருமணத்தின் போதான” என்பதாகக் கொள்ளப்படும். விவாகரத்துப் பெறப்படுமாயின் அல்லது நீதிமுறைப் பிரிவினை பெறப்படுமாயின், அதன்பின்னரான கொள்ளல்கள் தனிப்பட்ட ஆதனமாகவே கருதப்படுதல் வேண்டும். ஆதனப் பொதுமையானது விவாகரத்துப் பெறப்படும் போது அல்லது நீதிமுறைப்பிரிவினைப் பெறப்படும் போது முடிவுக்கு வருகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தேடிய தேட்ட ஆதனமானது கணவன், மனைவி இருவரிடையே சமமாகப் பகிரப்படுகின்றது. 1911ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 6ஆம் பிரிவானது 1947ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் திருத்தப்பட்டது. இதற்கிணங்க, திருமணமான பெண் திருமணத்தின்போது அவளுக்கு உரித்தான ஆதனம் மற்றும் திருமணம் நிலையாகவுள்ளபோது நன்கொடை, வழியுரிமை அல்லது ஏதேனும் ஆதனத்தின் மாற்றீடு மூலம் உரித்தாக வருகின்ற ஆதனம் அவரின் தனிப்பட்ட ஆதனம் என்பதுடன், அசையும் ஆதனம் தொடர்பில் கணவனின் சம்மதமின்றி கையுதிர்ப்பதற்கான முழுத்தத்துவம் கொண்டிருப்பதுடன் அசையா ஆதனம் தொடர்பில் கணவனின் எழுத்திலான சம்மதத்துடன் கையுதிர்க்கலாம். ஆனால் இறுதிவிருப்பாவணம் மூலம் தனது ஆதனங்களைத் திருமணமாகாத பெண் என்றாற்போன்று கையாள முடியும். 1947ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் 7ஆம் பிரிவு திருத்தப்பட்டதுடன் இதற்கிணங்க கணவனும் மேற்கூறப்பட்ட வழியாக ஆதனம் பெற்றுக் கொள்ளுமிடத்து, அது அவரின் தனிப்பட்ட ஆதனமாகக் கருதப்படுவதுடன் கணவன் அத்தகைய ஆதனத்தை கையுதிர்க்க அல்லது கையாள முழுத்தத்துவம் கொண்டவராவார். தேடிய தேட்டத்தின் வரைவிலக்கணம் 1947ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் பதிலிடப்பட்டது. இதனையடுத்து 20ஆம் பிரிவும் பதிலிடப்பட்டது. இதற்கிணங்க இருவருள் ஒரு வாழ்க்கைத்துணைவர் இறப்பதன்மீது, இறந்த வாழ்க்கைத்துணைவருக்குச் சொந்தமான தேடிய தேட்டத்தின் அரைப்பங்கு உயிர்வாழும் வாழ்க்கைத்துணைக்குவருதல் வேண்டுமென்பதுடன், மற்றைய அரைப்பங்கு மற்றைய வாழ்க்கைத்துணையின் வழியுரிமையாளருக்கு வந்துறுதலும் வேண்டும். 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் 20ஆம் பிரிவானது இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அதன் (1) ஆம் உட்பிரிவானது ஒவ்வொரு வாழ்க்கைத்துணையினதும் தேடிய தேட்டமானது இரண்டு வாழ்க்கைத்துணைவர்களுக்கும் பொதுவான ஆதனமாக இருத்தல் வேண்டுமென்பதுடன், அது பின்வருமாறு சொல்லப்படுகின்றது. வாழ்க்கைத்துணைவரில் ஒருவரினால் கொள்ளப்பட்டு தனது பெயரில் வைத்திருந்தாலுங்கூட இருவரும் அதற்குச் சமமாக உரித்துடையவர்களாதல் வேண்டும் என்கிறது. இவ்வுட்பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் (2)ஆம் உட்பிரிவானது, வாழ்க்கைத்துணைவருள் ஒருவர் மரணசாசனம் இல்லாது இறப்பதன்மேல் இணைந்த ஆதனத்தின் அரைப்பங்கு உயிர் வாழ்பவரின் ஆதனமாகத் தொடர்ந்திருத்தல் வேண்டுமென்பதுடன், மற்றைய அரைப்பங்கு இறந்தவரின் மரபுரிமையாளருக்கு உரித்தாதல் வேண்டுமென்பதுடன், திருமணம் ஒன்றில் கலைப்பின்மீது அல்லது பிரிவினையின்மீது ஒவ்வொரு வாழ்க்கைத்துணையும் இணைந்த ஆதனத்தின் அரைப்பங்கினைத் தனது புறம்பான பாவனைக்கென எடுத்தல் வேண்டும் என்கிறது. இவ்வுட்பிரிவும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே 1947ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க கட்டளைச் சட்டம் தேடிய தேட்டத்தின் பழைய எண்ணக்கருவை மீளக் கொண்டுவந்தது. இதன்படி பெறுமதியான பிரதிபயன் வாழ்க்கைத்துணையொருவரின் தனிப்பட்ட ஆதனத்தின் ஏதேனும் பாகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருத்தலாகாது. எனவே உழைத்த உழைப்புக்கள் மட்டுமே தேடிய தேட்டமாக வரமுடியும். அத்துடன் தனிப்பட்ட ஆதனத்திலிருந்தான இலாபங்கள் தேடிய தேட்டமாக வரமுடியும். புதிய திருத்தத்தின் படி தேடிய தேட்டத்தில் கணவன் மனைவி இருவரும் முறையே அரை அரைவாசிக்கு உரித்தாளர்களாவார்கள். ஒரு வாழ்க்கைத்துணை இறக்கும்போது உயிரோடிருப்பவர் தனது பாகம் அரைவாசியுடன் இறந்தவரின் பாகம் அரைவாசியில் அரைவாசியாகிய கால் பங்குடன் முக்கால் பங்குக்கு உரித்தாளராவார். இறந்த வாழ்க்கைத்துணையின் கால் பங்கு அவரது பிள்ளைகளுக்கு சமமாக பகிரப்படும் பிள்ளைகள் இல்லாதவிடத்து பெற்றோருக்கு சென்றடையும். பெற்றோரும் இல்லாதவிடத்து இறந்தவரின் சகோதரர்களுக்கு சமமாக பகிரப்படும்.
உசாத்துணை நூல்கள்
- Thambiah H.W., Laws and Customs of the Tamils of Jaffna.
- Kamala Nagendra, Matrimonial Property and Gender Inequality: A Study of Thesawalamai.
- Coorey, L.J.M., Introduction to the Legal System of Sri Lanka.
- S. Selvagunapalan, Thesawalamai Law.
Mrs Mathuri Niroshan (LL.B (Department of Law, University of Jaffna), LL.M (Faculty of Law, University of Colombo), Dip in Forensic Medicine (Faculty of Medicine, University of Peradeniya)
Former Magistrate,
Attorney at Law & Notary Public

