என்னை ஆளாக்கிய அன்னையின் நினைவுகளுடன் மீண்டும் மாணவியாய்
With the Memories of the Mother Who Shaped Me, Becoming a Student Again
அன்னையின் நினைவுகளோடு மீண்டும் மாணவியாகும் பயணம் பற்றிய தனிப்பட்ட எழுத்து.
வாழ்க்கையில் பல கட்டங்களை நாம் கடந்து வந்தாலும், சில கட்டங்கள் மட்டுமே என்றென்றும் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அவ்வாறான மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த காலம்தான் என்னுடைய கல்லூரி வாழ்க்கை.
நடந்து திரிந்த பாதைகளும், கதைத்துப் பேசிய நண்பர்களும், ஓடி விளையாடிய மைதானமும், பாடித்திரிந்த சங்கீத வகுப்பும், எழுத்துக்களால் உயிர் பெற்ற கரும்பலகையும் என எண்ணற்ற நினைவுகளால் என் கல்லூரி நாட்கள் நிரம்பியிருக்கின்றன.
கரும்பலகை முன் நின்று பாடம் எடுத்த ஆசிரியர்களும், தவறு செய்தபோது கண்டித்து வழிநடாத்திய ஆசான்களும், தட்டிக்கொடுத்து ஊக்கமளித்த ஆசிரியர்களும், ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் நம்மை முன்னேற்றிய குருமார்களும், போட்டிபோட்டு முன்னேற்றிய நண்பர்களும், உணவைப்பங்கிட்டு சிரித்தபடி சாப்பிட்ட தோழர்களும் என இனிமையும் உணர்வும் கலந்த எண்ணற்ற நினைவுகளை என் கல்லூரி வாழ்க்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
அத்தகைய இனிய கல்லூரி நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
தரம் 9 வரை யா/தொல்புரம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் நிறைவுசெய்து அங்கு மேலதிக வகுப்புக்கள் இல்லாத காரணத்தினால் 2007ஆம் ஆண்டு தரம் பத்திற்கு எனது இக்கல்லூரியில் இணைந்துகொண்டேன். கனத்த மனத்துடன் பல ஏக்கங்களுடன் பாடசாலைக்குள் நானும் எனது பழைய நண்பர்களும் இக்கல்லூரிக்குள் உள்நுழைந்தோம்.
நான் ஏற்கனவே கற்ற பாடசாலையுடன் ஒப்பிடுகையில் பௌதீக ரீதியாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் பிரம்மாண்டமாகயிருந்தது. இக்கல்லூரியின் முதல் நாள் எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. வாசலினூடாக உள்நுழையும்போதே சரஸ்வதித்தாயின் தரிசனத்துடன் எனது கல்லூரி வாழ்க்கை சிறப்பானதாகவும் எனது கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே உள்நுழைந்தேன். தொடர்ந்து சரஸ்வதியின் அழகை மிஞ்சும் அளவிற்கு சரஸ்வதி தாயை நேரே கண்டது போன்று எனது எதிரில் கல்லூரி அலுவலகத்தடியில் செல்வி ரீச்சர் அழகிய சேலையுடன் நின்றிருந்தார். அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதே அவரும் பதிலுக்கு வணக்கம் கூறி நீங்களா புதிதாக இணைந்த மாணவர்கள் என வினவினார்.
பின்னர் நான் தரம் 10A வகுப்பிற்குள் உள்வாங்கப்பட்டேன். குறித்த வகுப்பில் கலா ரீச்சர் எமது வகுப்பாசிரியராகவும் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் வந்தார். கலா ஆசிரியர் தற்போது காலஞ்சென்று விட்டாலும் அவர் எமக்கு ஆசிரியராக மட்டுமன்றி ஒரு தாயைப்போலவே எங்களை நடாத்தி வந்த அவரது நினைவுகள் என்றும் எமது மனதை விட்டு நீங்காதவைகள்.
இவ்வாறாக மறக்க முடியாத புதுமை அனுபவமாக முதல்நாள் மனதில் நீங்காது இருக்க காலப்போக்கில் பள்ளி எனக்கு இரண்டாவது இல்லமாக மாறியது. நான் பாடசாலைக்கு வராமல்விட்டது என்பது மிகவும் அரிது. பாடசாலையில் நடைபெறும் சகல போட்டிகளிலும், கலைநிகழ்வுகள், விளையாட்டுப்போட்டி என அனைத்திலும் பங்குபற்றுவேன். அதற்காக ஆசிரியர்களின் பங்களிப்பென்பது சொல்லில் அடங்காதவை.
எங்களுக்கு ஆங்கில பாடம் கற்பித்த குஞ்சு ரீச்சர் அவர்கள் வகுப்பறையில் தமிழில் ஒரு வார்த்தை கதைத்தால் 5 ரூபா அறவிடுவேன் எனக் கூறி பாவற்காய் போன்று இருந்த ஆங்கில பாடத்தையும் ரசித்து கற்க வழிசமைத்தவர். ரீச்சர் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் அவரது பசுமையான நினைவுகளும் அன்பு கலந்த அக்கறையுடனான அடிகளும் என்றும் எமது மனதைவிட்டு நீங்காதவை.
எமது கணித பாட ஆசான் திருக்குமார் சேரின் வகுப்பென்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். குறுகிய நேரத்தில் மணி அடித்து விட்டதோ எனத் தோன்றும். அவரது பாட நேரம் போவதே தெரியாமல் கடந்துவிடும். பழைய அறிவுரைக் கதைகள் பல சொல்லுவார். இவ்வாறாக ஆசிரியர்களின் அறிவுரைகளே எங்களை செப்பன் செதுக்கியது என்றால் மிகையாகாது.
சங்கீத வகுப்புகளுக்கு செல்வதென்றால் பேரவா. பங்கயற்செல்வி ரீச்சரின் நளினத்துடன் கூடிய சங்கீத வகுப்புக்கள் என்றும் பசுமையானவைகள். சகலகலா வல்லி மாலை பத்து பாடல்களையும் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இராகத்துடன் அழகாக சொல்லி தருவார். எனக்கு பஞ்ச புராண போட்டிக்காக சொல்லித்தந்த தேவாரங்களையே இன்றும் நான் கோயில்களில் புராணபடனம் செய்வதுண்டு.
எமது தமிழ் ஆசான் ஜெயமலர் ஆசிரியர் தமிழை கனிவாகவும் இனிமையாகவும் கற்பிப்பார். இவரிடம் கட்டுரைக்கு மார்க்ஸ் பெறுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. இவ்வாறாக எம்மை செதுக்கிய பெருந்தகைகளின் நினைவுகளை எளிதில் எழுதிவிட முடியாது.
சமய ஆசான் லலிதா ரீச்சர். தேவாரம் பொருள் என்பன பாடமாக்க வேண்டிய தேவையே எமக்கிருந்ததில்லை. வகுப்பிலேயே தேவாரத்தின் பொருளை நாம் விளங்கி எடுத்துவிடுவோம். அவ்வளவு இலகுவாக எமக்கு சமயத்தை கற்பித்தவர்.
வரலாறு கற்பித்த சண்முகநாதன் ஆசிரியரை எமக்கு கண்டாலே பயம். கேள்வி கேட்டு எங்களை கண்டிப்பார். கசப்பான பாடங்களை அவருக்கு பயத்திலேயே படித்து முடித்துவிடுவோம்.
சுகாதாரம் கற்பிப்பதற்கு ஆரம்பத்தில் ஆசிரியர் எவரும் இல்லாதபோது சிவறி மாஸ்டர் எமக்கு பாடம் எடுப்பார். அவரது பல நல்ல குணங்களை நானும் பின்பற்றுகின்றேன். குறிப்பாக மற்றவர்களுக்கு தன்னலம் பார்க்காது உதவி செய்வது. பாடசாலையை தனது உயிருக்கும் இணையாக நேசிக்கின்ற ஒரு உத்தம மனிதர்.
அதனைத்தொடர்ந்து எமக்கு சுகாதாரம் கற்பித்த ஜெயகெளரி ஆசிரியர் மிகவும் எளிமையாக நடைமுறை விளக்கங்களுடன் பாடத்தை கற்பித்திருந்தார்.
பள்ளி வாழ்க்கையில் மெய்வல்லுனர் போட்டிகளில் இல்லத்தலைவியாகவும் விளையாட்டுத்துறைத்தலைவியாகவும் இருந்தது மனநிறைவே. நான் சிவப்பு இல்லத்தை சேர்ந்தவர். எமது இல்லத்திற்கு ஜெகா ஆசிரியரே பொறுப்பாக இருந்தார். அவருடன் இருந்தாலே தனி உற்சாகமாக இருக்கும். அணிநடை வகுப்புக்களை சளைப்பின்றி நேர்த்தியாக எமக்கு சொல்லித்தந்து எம்மை வழிப்படுத்தினார். அவருடைய காலத்தில் நாங்கள் 1ஆம் இடம் பெற்றோம் என்பதில் பெருமையடைகின்றேன்.
எமது இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் இல்லங்கள் அமைக்கும்போது ஏனைய இல்லங்களுடன் போட்டிபோட்டு இல்லங்களை அமைப்போம். நாங்களும் நீல இல்லத்தவர்களும் போட்டிபோட்டு கப்பல் கட்டிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. இல்லங்கள் அமைக்கும்போது நிறைஞ்சதுர்க்கன் சேர் மற்றும் கணேசமூர்த்தி சேரின் ஊக்கப்படுத்தல்கள் என்றும் மறக்க முடியாதவை. நாங்கள் கயிறு இழுக்கும் போட்டிகளில் பங்குபற்றும்போது ஜெகா ரீச்சர் மற்றும் கணேசமூர்த்தி சேர் எங்களுடன் சேர்ந்து தாங்களும் துள்ளி ஆர்ப்பரிப்பார்கள். இவ்வாறான ஆசிரியர்கள் எமக்கு கிடைத்தமை வரமே.
மரியாதைக்குரிய செல்வி அதிபரின் ஓய்வுக்கு பின்னர் சிறீகாந்தா ஐயா அவர்கள் எமது பாடசாலையின் அதிபராக பொறுப்பெடுத்தார். அவருடைய காலத்திலே பாடசாலையில் பூங்கன்றுகள் பல நாட்டப்பட்டன. எமது உயர்தர மாணவர்களின் செயற்திட்டத்திற்காக கனகரட்ணம் மண்டபத்திற்கு முன்னுள்ள பகுதியில் எனது தலைமையிலான குழு பூங்கன்றுகளை நட்டோம். சிறீகாந்தா ஐயாவின் மேடைப் பேச்சுக்கள் கேட்பதென்றால் எனக்கு பேரவா. பல நல்ல சிந்திக்கத்தக்க கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பார்.
2009ஆம் ஆண்டு உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவை தெரிவு செய்தேன். பிரபாகரன் ஆசிரியர் பொருளியல் பாடத்தை கற்பித்தார். பிரபாகரன் சேர், தான் எவ்வாறு வறுமையிலும் செம்மை கண்டேன் என்ற விடயத்தை எமது வகுப்பறையில் அடிக்கடி சொல்லுவார். வறிய குடும்பத்தைச் சேர்ந்த என்னைப்போன்ற மாணவர்களுக்கு அவருடைய வார்த்தைகள் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கமலினி ஆசிரியர் கணக்கீட்டினை மிகவும் கனிவாக தனது இனிய குரலில் நேர்த்தியாக கற்பிப்பார். வசந்தா ரீச்சர் எமக்கு பல ஆக்க பூர்வமான தகவல்களுடன் பரீட்சைகளை எவ்வாறு வெல்வது எவ்வாறு தனது வர்த்தக பாடத்தை இலகுவாக கற்பது என சொல்லித் தருவார். கைலைவாசன் சேர் என்றால் எங்களுக்கு பயத்துடன் கூடிய மரியாதை. இவ்வாறாக ஏணிபோல் இருந்த எமது ஆசிரியப்பெருந்தகைகளின் பணி என்றும் போற்றுதலுக்குரியவையே.
மேலும் GIT பாட பரீட்சைக்கு ஒரு (01) மாத காலத்திற்கு முன்பு எமது பிரிவிற்கு ஆசிரியர் எவரும் இல்லாத காரணத்தினால் பஸ்ரியன் ஆசிரியர் அவர்கள் தனது விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுடன் சேர்த்து எங்களுக்கும் மிகவும் எளிமையாக பரீட்சைக்கு தேவையான விடயங்களை கற்பித்தார். குறித்த பாடத்திலும் சிறந்த பெறுபேறு பெறுவதற்கு குறித்த ஆசிரியரே காரணம் என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாதவை.
உயர்தர மாணவர் ஒன்றிய விருந்துபசார நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடாத்தும்போது நிலாவரசி ஆசிரியர் எனது பாட ஆசானாக இல்லாவிட்டாலும் மிகவும் கரிசனையுடன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்கு பல்வேறு விதத்திலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிகழ்ச்சி திறம்பட நடாத்த வழி சமைத்திருந்தார்.
இவ்வாறாக அனைத்து ஆசான்களும் இங்கு வெளிப்படையாக பெயர் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும் பல்வேறு விதத்தில் நமது கல்வி மற்றும் இணைபாட விதான செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார்கள். கண்டிப்புடன் கூடிய அன்புடன் எம்மை வழிநடாத்திய கண் முன் நடமாடிய தெய்வங்கள் எம் ஆசான்.
நான் பாடசாலையின் முதலாவது உதவி சிரேஷ்ட மாணவி என்பதில் பெருமையடைகின்றேன்.
அத்துடன் பழைய மாணவர்களின் அனுசரணையினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்றமைக்காக எமது வகுப்பை சேர்ந்த நான் உட்பட லிங்கநேசன் மற்றும் பானுகா ஆகிய மூன்று மாணவர்கள் கல்லூரியில் முதலாவதாக மடிக்கணினியை பெற்ற மாணவ அணியினர் என்பதில் பெருமிதம் அடைகின்றோம். 2012ஆம் ஆண்டு தை மாதமளவில் வழங்கிய குறித்த மடிக்கணினியை நான் இன்றுவரையும் அதாவது 14 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றேன்.
வணிகப்பிரிவில் நான் கல்வி கற்றாலும் இன்று நான் சட்டத்தரணியாக இருப்பதற்கு ஜெகா ஆசிரியர் தான் காரணம் எனக் கூறினால் நீங்கள் சற்று யோசிக்கலாம். முதன்முதலாய் கண்ட பல்கலைக்கழகத்திற்கான முதல் படிவத்தை நிரப்புவதற்காக ஜெகா ஆசிரியர் அவர்களை நாடினேன். அப்போது அவர் உந்தன் பெறுபேறும் உன்னுடைய ஆளுமையும் நீ முகாமைத்துவப்பீடத்திற்கு செல்வதைக் காட்டிலும் சட்ட பீடத்திற்கு செல்வதே உனக்கான சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை அளித்து முதற்தெரிவாக சட்ட பீடத்தினை இட்டு முதற் படிவத்தினை நிரப்பி தந்தார். அவரின் எண்ணம்போல் கல்லூரித்தாயின் ஆசீர்வாதத்தினால் நானும் சட்ட பீடத்திற்கு தெரிவாகினேன்.
என்னுடன் கல்விகற்ற அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்து தற்போது உன்னத நிலையிலேயே இருக்கின்றார்கள் என்றால் கல்லூரி அன்னை எமக்களித்த உரமும் அவளின் ஆசீர்வாதம் எனும் வரமுமே காரணமாகும்.
பாடசாலையை விட்டு வெளியேறி பன்னிரெண்டு வருடங்களுக்கு பின்னர் 2023ஆம் ஆண்டு கல்லூரியில் பரிசளிப்பு தினத்தின்போது நிறுவுனர் நினைவுப்பேருரை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. குறித்த உரை அனைவராலும் பாராட்டப்பட்டமை கல்லூரி அன்னை எனக்களித்த வரமாகும்.
பாடசாலையில் பெற்ற பல்வேறு தலைமைத்துவப் பண்புகள் என் வாழ்க்கையை மேலும் அடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்வதற்கு வழிசமைத்தமை என்பதில் ஐயமில்லை.
நான் சட்டத்தரணியாகவும் தொடர்ந்து நீதவானாகவும் தெரிவுசெய்யப்பட்டு பதவி ஏற்றபோது கல்லூரிச் சமூகத்தினர் மட்டற்ற புளகாங்கிதம் அடைந்து பல்வேறு வழிகளில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை இன்றும் எனது மனதில் நிறைந்திருக்கின்றன.
கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் மிகவும் அருமையான மற்றும் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றாகும். நான் விக்ரோறியன் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன். ஏக்கத்துடன் கல்லூரி அன்னையின் மடியில் காலடி வைத்த நான் சாதித்த மன நிறைவுடனும் அவளை பிரிந்து செல்கின்றேன் என்ற கனத்த மனத்துடன் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறினேன்.
பல்கலைக்கழகங்களில் நீங்கள் வேம்படியா, சுண்டுக்குளி மாணவியா அல்லது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவியா எனக் கேட்பார்கள் நான் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி மாணவி என பெருமிதத்துடன் கூறுவேன்.
ஒவ்வொரு வருடமும் வெளியாகும் கா.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பெறுபேறுகளை ஆர்வத்துடன் பார்ப்பேன். கல்லூரியின் மாணவர்களின் நடன நிகழ்வுகளை இரசித்து பார்ப்பேன். கிரிக்கெட் அணியினரின் சாதனைகளைக் கேட்டு பெருமை கொள்வேன். ஒவ்வொரு தருணத்திலும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு சொல்லில் அடங்காதவை.
இன்று எமது கல்லூரித்தாய் தனது 150வது அகவை தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றாள். பல நல்ல சமுதாயத்தை உருவாக்கிய நம் அன்னைக்கு நானும் அதில் ஒருத்தி என்ற பேரானந்தத்துடன் நன்றியுடன் என் பள்ளிக் காலத்தை நினைவு கூர்ந்து என்றும் கல்லூரி தாயை மறவாதவளாய் கல்லூரித்தாய்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க எனக்கு வயதோ அனுபவமோ போதாமையினால் அவளை வணங்கி என் சிறு கிறுக்கலை நிறைவுறுத்திக் கொள்கின்றேன்.
திருமதி மாதுரி நிரோஷன் (LL.B (Jaf), LL.M (Col))
முன்னாள் நீதிபதி,
சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்

