வெளியீடுகள்

தரவும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பும்: இலங்கையின் அரசு நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயம்

Data and Digital Public Infrastructure: A New Chapter in Sri Lanka's Government Modernization

இலங்கையின் அரசு நவீனமயமாக்கலில் தரவு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பங்கு பற்றிய ஆய்வு.

காலை ஆறு மணி. சிவா தனது வாழ்நாளின் முதல் கடவுச்சீட்டுக்காக (Passport) விண்ணப்பிக்கப் புறப்படுகிறார். வெளிநாட்டில் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பு அவருக்காக காத்திருக்கிறது; அதை உறுதிப்படுத்த இனி எஞ்சியிருப்பது கடவுச்சீட்டு ஒன்றுதான். பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள் என தேவையான ஒவ்வொரு ஆவணத்தையும் முந்தைய இரவே ஒரு கோப்பில் ஒழுங்காக அடுக்கி வைத்திருக்கிறார்.

பேருந்தில் பயணித்து, மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்த பின், இறுதியில் அவரது முறை வருகிறது. ஆனால் ஆவணங்களைப் புரட்டிப் பார்த்த அதிகாரி நெற்றியைச் சுருக்குகிறார். பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயருக்கும் அடையாள அட்டையில் உள்ள பெயருக்கும் ஓர் எழுத்து வேறுபடுகிறது. “முதலில் இதைச் சரிசெய்து கொண்டு வாருங்கள்,” என்று கூறி அவர் அடுத்தவரை அழைக்கிறார். அந்த ஒரேயொரு எழுத்தின் வேறுபாட்டைச் சரிசெய்வதற்காக சிவா இன்னொரு அலுவலகத்தை நாட வேண்டும்; இன்னொரு வரிசையில் நிற்க வேண்டும்; இன்னும் சில நாட்களை இழக்க வேண்டும். வேலைவாய்ப்பின் கடைசித் திகதி நெருங்க, அவரது மனதில் பதற்றம் கூடுகிறது.

இது பலருக்கும் பழக்கமான கதை. ஆனால் இதே காட்சியை வேறொரு விதமாகவும் கற்பனை செய்து பார்க்கலாம்.

அரசின் தகவல் அமைப்புகள் ஒன்றோடொன்று பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருந்தால், அந்த அதிகாரி ஒரே திரையில் இரு பதிவுகளையும் பார்த்து, சில நொடிகளில் சரியான தகவலை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ஒரே தகவலை மீண்டும் மீண்டும் பல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே சிவாவுக்கு ஏற்பட்டிருக்காது. இந்த எளிமையான, ஆனால் ஆழமான மாற்றத்திற்கான அடித்தளம்தான் டிஜிட்டல் அரசு (Digital Government) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure - DPI). டிஜிட்டல் அரசு என்பது தொழில்நுட்பம் பற்றிய கதை அல்ல; அது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் மாற்றத்தின் கதை.

டிஜிட்டல் அரசு என்பது அரசுப் படிவங்களை இணையத்தில் வெளியிடுவது அல்லது அலுவலகங்களில் கணினிகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல. அது அரசு சேவைகளை வடிவமைக்கும் முறையையே அடிப்படையில் மாற்றும் ஒரு புதிய அணுகுமுறையாகும்.

இந்த அணுகுமுறையின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று “ஒருமுறை கொள்கை” (Once-Only Principle) ஆகும். அதாவது, ஒரு குடிமகன் ஒரு தகவலை அரசுக்கு ஒருமுறை வழங்கிய பிறகு, அதே தகவலை மீண்டும் மீண்டும் பல துறைகளுக்கு வழங்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது. பிறப்புத் தகவல், அடையாளத் தகவல், கல்வித் தகவல், வரித் தகவல் போன்றவை பாதுகாப்பான முறையில் தொடர்புடைய அரசு நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டும். இதனை சாத்தியமாக்குவதற்கான முக்கிய கருவி பாதுகாப்பான தேசிய தரவு பரிமாற்றக் கட்டமைப்பாகும். (national data exchange).

இலங்கையின் டிஜிட்டல் பயணம்

இலங்கையின் டிஜிட்டல் மாற்றப் பயணம் புதியதல்ல. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சேவைகளை நவீனமயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

e-Sri Lanka திட்டத்தின் மூலம் அரசு சேவைகளை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர், Lanka Government Network (LGN) உருவாக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள் ஒரே அரசுத் தொடர்பாடல் வலையமைப்பின் கீழ் இணைக்கப்பட்டன. இதனால் அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மேம்பட்டது. அதேபோல், 1919 அரசுத் தகவல் மையம் அரசு சேவைகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கியது. சமீப காலங்களில் GovPay போன்ற முயற்சிகள் அரசுக்கான கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியை மக்களிடம் கொண்டு வந்துள்ளன. இவ்வாறு பல தனித்தனி முயற்சிகளாகத் தொடங்கிய திட்டங்கள் இன்று ஒரு ஒருங்கிணைந்த தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கண்ணோட்டமாக வளர்ந்து வருகின்றன.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு: இலங்கையின் புதிய அடித்தளம்

2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் (National Digital Economy Strategy 2030), இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான தெளிவான பாதையை முன்வைக்கிறது. இந்தக் கண்ணோட்டத்தின் மையத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) உள்ளது.

ஒரு நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பொதுவாக மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது:

  1. டிஜிட்டல் அடையாளம் (Digital Identity)
  2. தரவு பரிமாற்றக் கட்டமைப்பு (Data Exchange)
  3. டிஜிட்டல் கட்டண அமைப்பு (Digital Payments)

இந்த மூன்று கூறுகளும் ஒன்றாக இணையும்போதுதான், அரசு சேவைகள் விரைவாகவும் திறமையாகவும் வழங்கப்பட முடியும்.

SL-UDI – ஒவ்வொரு குடி நபருக்கும் ஒரே டிஜிட்டல் அடையாளம்

இலங்கையின் மிக முக்கியமான டிஜிட்டல் திட்டங்களில் ஒன்று Sri Lanka Unique Digital Identity (SL-UDI) ஆகும். இந்த அமைப்பின் நோக்கம், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதாகும். கைரேகை, கண்விழி மற்றும் முக அடையாளம் போன்ற உயிரியல் தகவல்களின் உதவியுடன் ஒருவர் தமது அடையாளத்தைப் பாதுகாப்பாக நிரூபிக்க முடியும்.

எதிர்காலத்தில் ஒரு குடிமகன் கடவுச்சீட்டு பெறுவதற்கோ, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கோ, பல்கலைக்கழக விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கோ அல்லது அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கோ தனித்தனியாக அடையாள ஆவணங்களைச் சுமக்க வேண்டிய அவசியம் குறையும். ஒரே டிஜிட்டல் அடையாளத்தின் உதவியுடன் பல அரசுச் சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் பெற முடியும்.

தேசிய கூட்டமைப்புத் தரவு பரிமாற்றம்

SL-UDI மட்டும் போதாது. அரசின் பல்வேறு நிறுவனங்கள் ஒன்றோடொன்று பாதுகாப்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வேண்டும். தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டங்களில், அரசு நிறுவனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தரவு பரிமாற்றத்தை உருவாக்கும் கூட்டமைப்பு (Federated) அணுகுமுறை முன்மொழியப்பட்டுள்ளது. இதன் முக்கியச் சிறப்பு என்னவென்றால், அனைத்து தரவுகளும் ஒரே இடத்தில் குவிக்கப்படாது. மாறாக, ஒவ்வொரு துறையும் தனது தரவைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, தேவையான சமயங்களில் மட்டுமே பாதுகாப்பான முறையில் அதைப் பகிர்ந்து கொள்ளும்.

இந்த அணுகுமுறை தனியுரிமையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது; அதே நேரத்தில் அரசு சேவைகளின் வேகத்தையும் உயர்த்துகிறது.

GovPay – அரசுக்கான ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயில்

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மூன்றாவது தூணாகக் கட்டண அமைப்பு விளங்குகிறது. அடையாளமும் தரவுப் பரிமாற்றமும் இருந்தாலும், கட்டணங்களைச் செலுத்துவதற்கான எளிய வழி இல்லாவிட்டால் சேவைச் சங்கிலி முழுமை பெறாது.

GovPay என்பது அரசுக்கான ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயிலாகும். அபராதங்கள், கட்டணங்கள், அனுமதிப் பத்திரக் கட்டணங்கள், வரிகள் போன்றவற்றை ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகச் செல்லாமல், ஒரே தளத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்த இது வழிவகுக்கிறது. இதன் மூலம் ரொக்கப் பரிவர்த்தனைகள், நீண்ட வரிசைகள் மற்றும் கணக்குப் பிழைகள் குறைகின்றன; கட்டணப் பதிவுகளில் வெளிப்படைத்தன்மையும் கூடுகிறது.

முடிவுரை

அடையாளம், தரவுப் பரிமாற்றம், கட்டணம் ஆகிய மூன்று தூண்களும் ஒன்றிணையும்போது, அரசு சேவைகள் குடிமகனை அலைக்கழிக்கும் சுமையாக இல்லாமல், அவருக்கு உதவும் கருவியாக மாறுகின்றன.

தற்போதைய நடைமுறை மற்றும் டிஜிட்டல் நடைமுறை ஒப்பீடு
தற்போதைய நடைமுறை vs டிஜிட்டல் நடைமுறை

கட்டுரையின் தொடக்கத்தில் நாம் சந்தித்த சிவாவுக்குத் திரும்புவோம். ஒன்றோடொன்று இணைந்த, பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பு ஒன்றில், அவர் தனது பெயர் வேறுபாட்டுக்காக நாட்களை இழக்க வேண்டியதில்லை. ஒரே டிஜிட்டல் அடையாளம், சில நொடிகளில் சரிபார்க்கப்படும் ஒன்றிணைந்த தகவல் மையம் மற்றும் ஒரே தளத்தில் செலுத்தப்படும் கட்டணம் - இவை மூன்றும் அவரது கடவுச்சீட்டு மாற்றத்தை ஒரு தடையாக அல்லாமல், எளிய நடைமுறையாக மாற்றுகின்றன.

இதுவே இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தின் நோக்கம்: தொழில்நுட்பத்தை மையமாக வைப்பதல்ல, மக்களை மையமாக வைப்பது. தரவும் டிஜிட்டல் மாற்றமும் சரியான முறையில் கையாளப்பட்டால், அவை அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்து, நம்பிக்கையை வளர்க்கும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.

ஆக்கம்: திரு.மணிநேசன்
மென்பொறியாளர், GovTech Sri Lanka